ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சேர்ந்த முன்னாள் எம்.பி, ஏ.கே.எஸ்,விஜயன் தலைமையில் 3000- க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறையினரின் தடையை மீறி பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்ததும், பேரணியில் பெண்களும் மாணவர்களும் அதிகம் கலந்து கொண்டது நாகப்பட்டினத்தையையே ஸ்தம்பிக்க வைத்தது. வேதாந்தா மற்றும் ஒன்ஜிசி நிறுவனங்களுக்கு நாகை மாவட்டத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என டெல்டா மாவட்டங்களில் பல்வேறு வகையானப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்திட வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக நாகை அவுரித்திடலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கண்டனப்பேரணியை நடத்தினர். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்திட வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைத்திடக்கோரியும், கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. காவல்துறையினரின் தடையை மீறி நடைபெற்ற பேரணியை முன்னாள் நாகை திமுக எம்.பி தலைமை ஏற்று துவக்கிவைத்தார்.

அவரோடு மற்ற தலைவர்களும் முன் வரிசையில் கண்டனம் முழக்கமிட்டபடி சென்றனர். பேரணியில் திமுக, சிபிஎம், சிபிஐ, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் மற்றும் பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். நாகையே ஸ்தம்பிக்கும்படி கூடிய கூட்டத்தைக்கண்டு காவல்துறையே நிலைகுளைந்துபோனது. தடைகளை மீறி பேரணி நடைபெற்றது. அவுரித்திடலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மூன்று கிலோமீட்டர் பேரணி வந்ததை அடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் குவித்து பேரணியை தடுத்து நிறுத்த முயன்றனர். கட்டுக்கடங்காத கூட்டம் தடுப்புகளை தவிடுபொடியானது.

பேரணியின் விவரம் கேட்டு ஆட்சியரகத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அவசர அவசரமாக வெளியேறினார். பிறகு டி,ஆர்,ஓ விடம் மனுவை அளித்து கண்டன முழக்கமிட்டபடி கலைந்து சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நாகையே ஸ்தம்பிக்கும் அளவில் விவசாயிகள் கூடியது ஆட்சியாளர்களை யோசிக்க வைத்துள்ளது.