மெய்யாலுமே தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றாகிவிட்டது பா.ஜ.க.. இங்கே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அந்த தேசிய கட்சிக்கு வாக்கு வங்கி இல்லையென்றாலும், விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் முருகேசன் போன்றவர்கள், டாப் ரேஞ்சுக்கு கொண்டுபோக முயற்சித்து வருகின்றனர். எப்படி தெரியுமா?
சாத்தூர் ஒன்றியத்திலுள்ள கத்தாளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மூன்றாவது தடவையாகப் போட்டியிடுகிறார் முருகேசனின் மனைவி லட்சுமி. முருகேசனும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். அதிமுக கூட்டணி என்றாலும், ஸ்பெஷல் ஆகக் கவனித்தால் மட்டுமே வாக்குகளைப் பெற முடியும் என்ற அரசியல் கணக்கை கணித்து வைத்திருந்த முருகேசன், வித்தியாசமான ஒரு உத்தியைக் கையாண்டார்.

பா.ஜ.க. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் சாத்தூர் வாழவந்தாள்புரத்தில் தான் கட்டியுள்ள லட்சுமி இல்லத்தை ஜனவரி 20- ஆம் தேதி திறக்கவிருக்கும் நிலையில், அழைப்பிதழை வாக்காளர்கள் அனைவருக்கும் விநியோகித்தார். பிரதமர் நரேந்திரமோடியின் படத்தோடு, டோக்கனைப் போல் சீரியல் நம்பர் அச்சிட்ட அந்த அழைப்பிதழை சாத்தூரிலுள்ள அரிசிக்கடையில் கொண்டுபோய் கொடுத்தால், 10 கிலோ, 25 கிலோ அரிசிப்பை என வாக்காளர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொடுத்து விடுவார்கள்.

சாத்தூரில் அரிசிப்பை வாங்கி சொந்த கிராமத்துக்குத் திரும்பும் வாக்காளர்களின் வசதிக்காக மினி பஸ் கூட ஏற்பாடு செய்திருந்தார் முருகேசன். இன்று (30.12.2019) அந்த அரிசிக்கடையில் கூட்டமோ கூட்டம். அதனால், அந்த ஏரியாவில் போக்குவரத்து தடைபட்டது. அரிசி விநியோகம் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்குத் தெரிந்தே நடந்ததாம். ஆனாலும், இந்த விவகாரம் தேர்தல் அதிகாரிகளுக்கு எட்டிவிட, சாத்தூர் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், அரிசிக்கடை உரிமையாளர் பரமேஸ்வரனிடம் வெறுமனே விசாரணை நடத்தி அனுப்பிவிட்டார்.
மத்தியில் ஆளும் கட்சி பா.ஜ.க., மாநிலத்தில் ஆளும் கட்சி அதிமுக. அதிகார பலம் வாய்ந்த இக்கூட்டணியின் பா.ஜ.க. வேட்பாளராக இருக்கிறார் முருகேசன். அவர், விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவரும் கூட. லட்சுமியோ, அவர் மனைவி. அரிசிக் கடைக்காரர் பரமேஸ்வரன் வெறும் அம்புதான். இவர்களில் யார் மீது நடவடிக்கை எடுப்பார்கள்? தேர்தல் ஆணையத்திடமோ, காவல்துறையிடமோ, அந்த அளவுக்கு நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?