தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிதுரை. இவர் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடு, மாடுகளை வளர்க்கும் விவசாய தொழிலை செய்து வருகிறார். மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறார். இதே வேளையில், இசக்கிதுரை வீட்டிலிருந்து மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மூன்று நான்கு நாட்கள் கழித்து தான் வீட்டிற்குத் திரும்பும் என்பது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 30 ஆம் தேதியன்று இசக்கிதுரையின் ஆடு, மாடுகள் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. அதன்பிறகு, இசக்கிதுரையும் தன்னுடைய மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த இசக்கிதுரை மேலும் ஒருநாள் காத்திருக்கிறார். ஆனால், நான்கு நாட்கள் ஆகியும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு மாடுகள் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, தன்னுடைய கால்நடைகளைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில், பதறிப்போன இசக்கிதுரை இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், காணாமல் போன மாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சாத்தான்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதியில் காணாமல் போன இசக்கிதுரையின் மாட்டை மர்ம நபர் ஒருவர் இழுத்துச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அதை முழுவதுமாகப் பார்த்தபோது, கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில் கருப்பு நிற டீ ஷர்ட் மற்றும் நீல நிற லுங்கியில் வந்த மர்ம நபர் ஒருவர், மேய்ச்சலில் இருந்த மாட்டை கயிற்றைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார்.
மேலும், அந்த மாட்டின் உரிமையாளர் போல சாவகாசமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. இத்தகைய சூழலில், அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கால்நடைகளைத் திருடிச் செல்லும் மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, அந்த நபரைக் கைது செய்வதற்காக வலைவீசித் தேடி வருகின்றனர். தற்போது, மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை நள்ளிரவு நேரத்தில் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.