மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வந்த பயணிகள் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளில் 21.340 கிலோ எடையுள்ள 80,000 மதிப்பிலான குட்காவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி ரயில் நிலையத்தில் அடிக்கடி குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று மயிலாடுதுறையிலிருந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த மயிலாடுதுறை - திருச்சி விரைவு பயணிகள் ரயிலில் 2 பைகள் கேட்பாரற்று கிடந்தது. அப்போது அங்கு உள்ள பயணியிடம் விசாரித்த போது யாரும் பொறுப்பு ஏற்காத நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பைகளை கைப்பற்றினர்.
இந்த பைகளை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் முன்னிலையில் திறந்து சோதனை செய்ததில் 21.340 கிலோ எடையுள்ள சுமார் 80 ஆயிரம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.