தேர்தல் நாளன்று வாக்களிக்கும் கூலித்தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என்று சேலம் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஷாஜஹான் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் வித்யா நகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் அகமது ஷாஜஹான் (49). வழக்கறிஞர். ஏற்கனவே சட்டமன்ற, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19, 2019) தொடங்கியது. முதல் நாள், முதல் நபராக, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் சுயேச்சை வேட்பாளர் அகமது ஷாஜஹான் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் ஏழை கூலித்தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் நாளன்று ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடமும் மனு அளித்திருந்தேன். அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் அரசு, தனியார் ஊழியர்களுக்கு உள்ளதுபோல், கூலி தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் நாளன்று ஒரு நாள் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்து, எனக்கு பதில் கடிதமும் அனுப்பி உள்ளது. ஆனால் இதுவரை அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
தேர்தல் ஆணையம், கூலி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்படும். அல்லது, அந்தந்த மாநில அரசுகளாவது வாக்களிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லஞ்சம் பெறும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியும். சேலத்தில் உயர்நீதிமன்றக் கிளை தொடங்க பாடுபடுவேன். ஏழைகளுக்கும், மூத்த குடிமக்கள், விதவைகள், முதிர்கன்னிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு வேட்பாளர் அகமது ஷாஜஹான் கூறினார்.
வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, உள்ளூர் காவல்துறையினருடன் துணை ராணுவத்தினரும் பாதுபாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்பவருடன் நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்லும் நபர்கள் யாராக இருந்தாலும் மிகுந்த விசாரிப்புகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.