காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் 141 நாட்களுக்கு பிறகு திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச காவல்துறை, தமிழக சிபிசிஐடி- யிடம் முகிலனை ஒப்படைத்தது. இந்நிலையில் குளித்தலை சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் மீது கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் முகிலனை கைது செய்தனர். அதன் பிறகு 10 ஆம் தேதி காலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலன் பிறகு 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பிறகு இன்று மதியம் திருச்சி மத்திய சிறைக்கு சென்ற போலீசார் முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்தனர் அப்போது முகிலன் என் மீது என்ன வழக்கு வாரண்ட் இருக்கிறதா என்றெல்லாம் போலீசை பார்த்து கேள்வி எழுப்ப போலீசார் கஸ்டடி எடுப்பதற்காக நீதிமன்றம் கொண்டு செல்கிறோம் என கூறியிருக்கிறார்கள். ஆனாலும் முகிலன் முரண்டு பிடிக்க பல வந்தமாக முகிலனை கரூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். வழக்கம் போல் முகிலன் நீதிமன்றத்திற்கு முன்பு பல்வேறு கோஷங்களை முழங்கியவாறு நீதிமன்றத்தில் ஆஜரானார். போலீசார் நீதிமன்றத்தில் முகிலன் மீது பாலியல் வழக்கு உள்ளது. இது சம்மந்தமாக முகிலனை விசாரிக்க வேண்டி இருப்பதால் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என நீதிபதியிடம் கூறினார்கள்.
அப்போது முகிலன் என்னை போலீசார் சிறைக்குள்ளேயே அடிக்கிறார்கள். போலீஸ் கஸ்டடி கொடுத்தால் என்னை மேலும் அடிப்பார்கள் என கஸ்டடிக்கு செல்ல மறுத்தார். இந்த நிலையில் நீதிபதி எழுத்துப்பூர்வமாக உங்கள் பதிலை கூறுங்கள் என முகிலனிடம் கூறியதோடு, மீண்டும் நாளை காலை முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மீண்டும் நாளை 23- ஆம் தேதி நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் எடுக்க முடிவு செய்துள்ளனர். முகிலன் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு சம்பந்தமாகத் தான், இந்த கஸ்டடி என்றாலும் முகிலன் 141 நாள் எங்கே இருந்தார் யார் மூலமாக இருந்தார் என்று பல்வேறு விவரங்களை போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.