ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த எம்.வி.வி. சத்திய நாராயணா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி, மகன் சரத். இந்த நிலையில் எம்.பி சத்திய நாராயணா கடந்த புதன் கிழமை ஹைதராபாத் சென்றிருந்தார். வீட்டில் அவரது மகன் சரத் தனியாக இருந்த நிலையில் சில மர்ம கும்பல் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை கடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோதிக்கு ஃபோன் செய்து அந்த கும்பல் அவரிடம் இருக்கும் தங்க நகைகளைக் கொண்டு வந்து கொடுக்கும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் கூறிய இடத்திற்கு நகைகளுடன் வந்த ஜோதியையும் பிடித்து வைத்துக்கொண்ட மர்ம நபர்கள், பின்னர் எம்.பி. சத்திய நாராயணாவின் ஆடிட்டர் கன்னமனேனி வெங்கடேஸ்வராவுக்கு ஃபோன் செய்துள்ளனர்.
அவரிடம் எம்.பியின் மனைவி ஜோதி மற்றும் அவரது மகன் சரத் ஆகிய இருவரும் கடத்தப்பட்டதைக் கூறி இவர்கள் உயிருடன் வேண்டும் என்றால் ரூ.1 கோடி எடுத்துக்கொண்டு வருமாறு மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆடிட்டரும் சொன்ன பணத்தை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கும்போதே, இந்த கடத்தல் சம்பவம் குறித்து எம்.பி சத்திய நாராயணாவிற்கு தகவல் தெரியவர, உடனடியாக அவர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில் கடத்தல் கும்பல் எம்.பியின் மனைவி, மகன் மற்றும் அவரது ஆடிட்டர் ஆகியோருடன் காரில் தப்பித்துச் சென்றுள்ளனர். அந்த காரை துரத்திப் பிடித்த தனிப்படை, கடத்தப்பட்ட மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்தபோது 6 பேரில் மூவரை கைது செய்துள்ளனர். இந்த கடத்தலுக்கு மூளையாக பிரபல ரவுடி ஹேமநாத் செயல்பட்டு எம்.பியின் மனைவி, மகன் மற்றும் ஆடிட்டரை கடத்தியது தெரிய வந்தது.