Skip to main content

மருமகளை கொடூரமாகக் கொன்ற தாய்; வேடிக்கை பார்த்த மகன்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Mother-in-law and husband arrested in daughter-in-law passed away case
செல்வி

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகில் உள்ள டி. குளத்தூர்  என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் சின்னதம்பி நடியம்மாள் தம்பதிகள். இவர்களது மகள் முப்பது வயது செல்விக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள அயன் குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனது தந்தை கல்வராயன் தாயார் நாகக்கன்னி ஆகியோருடன் வசித்து வரும் நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் மாமனார் கல்வராயன் கடந்த மாதம் ஆறாம் தேதி அயன் குஞ்சரம் கிராமத்தில் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வி மாமனார் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்.

 

இந்த நிலையில் நேற்று முன் தினம் செல்வி திடீரென இறந்து போனதாக அவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வியின் பெற்றோர் விரைந்து வந்து மகளின் உடலைப் பார்த்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இறந்துபோன செல்வியின் கழுத்தில் காயங்கள் உள்ளன. இதனால் அவரது மரணத்தில் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரது கணவர் ராமகிருஷ்ணன், மாமியார் நாகக்கன்னி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

 

அதில், மாமியாரே மருமகளை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் என்ற விவரம் மேற்படி வழக்கில் தற்போது தெரிய வந்துள்ளது. ராமகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி செல்விக்கும் விவாகரத்து வழக்கு நடந்தபோது, மாமனார் கல்வராயனை பலர் முன்னிலையில் செல்வி திட்டி உள்ளார். இதைப் பார்த்த மாமியார் நாகக்கன்னிக்கு அப்போது கடும் கோபம் ஏற்பட்டது. இந்நிலையில் கல்வராயன் இறந்த துக்க நிகழ்விற்காக மாமியார் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த செல்விக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்ட மாமியார் நாகக்கன்னி மகன் ராமகிருஷ்ணன் உதவியுடன் செல்வி வலிப்பில் துடிக்கும்போது அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக நாகக்கன்னி ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாமியார் நாகக்கன்னி கொலைக்கு உடந்தையாக இருந்த செல்வியின் கணவர் ராமகிருஷ்ணன்  இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். வலிப்பு நோயால் துடித்த பெண்ணை இரக்கமற்ற முறையில் மாமியாரே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்