நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய இந்தத் தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஹைதராபாத்த்தில் இன்று (10-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து காங்கிரசுக்கு டெம்போ லோடு பணம் கிடைத்தால், பிரதமர் மோடி என்ன செய்வார்? மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு, மோடியும் அமித்ஷாவும் மிகவும் கவலையில் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டனர். காங்கிரஸை மட்டுமே தவறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடிக்கு மாங்கல்யம், மட்டன் மற்றும் முகலாயர்கள் ஆகிய 3 ‘எம்’ வார்த்தைகளைதான் விரும்புகிறார். ஒரு பிரதமர் குழந்தைத்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லதல்ல. அவர்கள் வளர்ச்சிக்காக வாக்கு கேட்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகளைத் திரித்து, எங்கள் தலைவரை இளவரசர் என்று ஒவ்வொரு முறையும் அழைப்பது தேவையில்லாதது” என்று கூறினார்.