
காதலித்து வந்த சிறுமிக்கு பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காக அத்துமீறி சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் பெற்றோரால் தாக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த முகமது நவாஸ் என்ற 22 வயது இளைஞர் காதலித்து வந்துள்ளார். ஆனால் சிறுமி அந்த இளைஞரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அச்சிறுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. பிறந்தநாளில் அவரை சந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்ட முகமது நவாஸ், கேக் ஒன்றை வாங்கிக்கொண்டு இரவு 12 மணி அளவில் சிறுமியின் வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த சிறுமியின் பெற்றோர்கள் முகமது நவாஸை பிடித்து வீட்டு வளாகத்திலேயே இருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். சிறுமியாக இருக்கும் தன் மகளிடம் காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்வதாகவும், இதனால் உறவினர்கள் வீட்டில் சிறுமியை வைத்திருந்தோம், பிறந்தநாள் என்பதால் வீட்டிற்கு கூட்டி வந்த நிலையில் மீண்டும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக முகமது நவாஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் முகமது நவாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.