நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலை எதிர்கொண்டு கடந்த மாதம் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிக்கான அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். நீட், கியூட் (CUET) தேர்வுகள் கட்டாயம் இல்லை. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை அகற்றப்படும். மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்’ என்று கூறியிருந்தது.
இதில் மகாலட்சுமி திட்டத்தைத் தொடர்புபடுத்தி வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சு தற்போது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திலால் பூரியா போட்டியிடுகிறார்.
அதனையொட்டி, சைலானா பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று (09-05-24) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான காந்திலால் பூரியா பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஒவ்வொரு பெண்கள் வங்கி கணக்கிலும் இந்தப் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். இது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது, இரண்டு மனைவிகளைக் கொண்ட நபராக இருந்தால். அவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் ” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி, “இரண்டு மனைவிகள் உள்ளவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று பூரியா ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்” என்று கூறினார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.