கோவை மாவட்டம், வால்பாறை அருகே அமைந்துள்ளது சிறுகுன்றா மலைப்பகுதி. இப்பகுதி முழுவதும் தேயிலை ஏலக்காய் மிளகு, காபி போன்ற மலைப்பயிர்கள் பயிரிடப்பட்டு பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியான இங்கு யானைகளின் புகழிடமாக வால்பாறை இருந்து வருகிறது. வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியானது வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது
இந்நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய சில யானை கூட்டங்கள் வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதியில் சுற்றித்திரிந்தன. அந்த யானை கூட்டங்கள் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தால், தண்ணீரைத்தேடி அலைந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக சிறுகுன்றா பகுதியிலிருந்த ஓடையை யானை கூட்டங்கள் கண்டுபிடித்தன. அங்கு விரைந்து சென்ற யானைகள் ஓடையில் ஓடும் தண்ணீரை எடுத்து ஊற்றி தங்களை குளிர்ச்சிப்படுத்திக் கொண்டன. இதையடுத்து, அருகிலிருந்த தேயிலை தோட்டத்திற்குச் சென்ற யானைகள் அங்கு உணவு தேடிச் சுற்றித்திரிந்தன. அப்போது, யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று குட்டித்தூக்கம் போட்டது. இதைக்கண்ட தாய் யானை குட்டியானைக்கு நிழலாக நின்று குட்டி யானை சுகமாக தூங்க வழிவகை செய்தது. மேலும், குட்டியானைக்கு பாதுகாப்பு அரணாகவும் தாய் யானை விளங்கியது.
இந்த நிகழ்வு நடைபெற்ற தினமானது வார விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகளும் இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை கண்டுகளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, குட்டி யானை தூங்கி எழுந்ததும், தாய் யானை குட்டி யானையை அழைத்து கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றது. இதனை வீடியோவாக எடுத்த அப்பகுதிவாசிகள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பகிரும் நெட்டிசன்கள் தாய்மையை எடுத்துரைக்கும் பாடல் வரிகளுடன் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இதையடுத்து பேசிய சிறுகுன்றா பகுதி மக்கள், ''அண்மைக் காலமாகவே தொடர்ந்து வனவிலங்குகளின் நடமாட்டம் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளில் அதிகரித்து காணப்படுகிறது. தொடார்ந்து, வால்பாறை பகுதியில் அதிக அளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வால்பாறை பகுதியில் சுற்றித் திரியும் யானைகளை காட்டுப் பகுதிக்கு விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேசிய சுற்றுலாப் பயணிகள் சிலர், ''கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதிக்கு வார விடுமுறை என்பதால் சுற்றிப்பார்க்க வந்திருந்தோம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக நாங்கள் வந்த தினத்தன்று யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. அதிலும், தேயிலை தோட்டத்தில் தன்னுடைய குட்டி யானையை சுகமாக தூங்க வைத்து பாதுகாப்பாக பார்த்த தாய் யானையை நெகிழ்ச்சியாக கண்டுகளித்தோம். பிரம்மிக்க வைக்கும் வகையில் அந்த காட்சிகள் இருந்தது.
அதுபோல, எங்களில் சில சுற்றுலாப் பயணிகள் வந்த வழித்தடத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் சில யானைகள் வழிமறித்ததாகவும், நல்வாய்ப்பாக உயிர்தப்பி வந்ததாகவும் கவலை தெரிவித்தனர். எனவே, வனத்துறையினர் மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து மக்களை காக்க வேண்டும்'' என அப்பகுதி சுற்றுலாப் பயணிகள் சிலர் கோரிக்கை வைத்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் தன்னுடைய குட்டியை சுகமாக தூங்க வைத்து பாதுகாப்புக்கு அருகிலேயே தாய் யானை இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.