நேற்று சென்னை எழும்பூரில் தனியார் லாட்ஜில் 50 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுடன் தங்கியிருந்த மலைராஜன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்த கள்ள நோட்டு எப்படி வந்தது யார் அதை அச்சடித்தது என பல்வேறு கோணங்களில் போலீசார் மலைராஜனிடம் போலீசார் விசாரணை நடந்தினர். ஆனாலும் மலைராஜன் கள்ளநோட்டுகளுடன் எழும்பூர் வர காரணமே போலீசார் வைத்த பொறிதான் என்பதுதான் சுவாரசியம்.
கயத்தாரை சேர்ந்த மலைராஜன் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உணவகம் நடத்தி வந்துள்ளான். அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக திரும்பவும் தமிழகம் வந்த மலைராஜன் விருதுநகரில் உள்ள கொம்பையா என்பவரின் அறிமுகத்தால் கோவையை சேர்ந்த தன்ராஜ் எனும் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்தவனுடன் தொடர்பில் இருந்துள்ளான். அப்போது தன்ராஜ் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் தருவதாக கூறியுள்ளான். இந்நிலையில் சென்னை தலைமை செயலகம் காலனி பகுதியில் பிடிபட்ட வேறு சில கள்ளநோட்டு கும்பல் சேர்ந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மலைராஜன் பற்றி கூற மலைராஜனை கைது செய்ய முயன்ற போலீசார் அவனை அவன் பாணியிலேயே பிடிக்க முயற்சி செய்தனர்.
சம்பந்தப்பட்ட மலைராஜனை பிடிக்க நேரில் சென்றால் தப்பித்து விடுவான் என எண்ணிய போலீசார் அவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு மண்ணுளி பாம்பு வேண்டும் என யாரோ ஒருவர்போல் பேசியுள்ளனர். ஆனால் மலைராஜனோ மண்ணுளி பாம்பு இல்லை 5 லட்சம் பணம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு வேண்டுமானால் கிடைக்கும் என தன்ராஜ் பாணியில் கூறியுள்ளான் மலைராஜன். அதனை போலீசார் ஒத்துக்கொள்ள 50 லட்சம் கள்ளநோட்டுடன் எழும்பூர் தனியார் லாட்ஜுக்கு வந்த மலையரசனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது அவன்கூடவே இருந்த பெண் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் டிக் டாக்கில் பழக்கமான ஸ்ரீதேவி என்று மலையரசன் தெரிவித்துள்ளான். ஸ்ரீதேவிக்கும் கள்ளநோட்டு கும்பலுக்கும் தொடர்புள்ளதாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் விருதுநகரை சேர்ந்த கொம்பையா, கோவையை சேர்ந்த தன்ராஜை போலீசார் கைது செய்ய விசாரணையை தொடக்கியுள்ளனர். இவ்வளவு தேர்தல் கெடுபிடிகள், பறக்கும் படைகள் என எல்லாவற்றையும் தாண்டி 50 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு எப்படி சென்னை வந்தது எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.