![mother and 2 child passed away in tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/vZtMZj0DKt9sAES0oIpIizF_DwookrflbOe-ZzNd6bA/1681118964/sites/default/files/inline-images/997_129.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னராசு. அதே ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சூர்யா சோமசிபாடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 4 வயதில் லட்சன், ஒரு வயதான உதயன் என ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சின்னராசுக்கும் சூர்யாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணி அளவில் சின்னராசு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார். நள்ளிரவு வீடு திரும்பிய சின்னராசு வீடு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் மனைவி மற்றும் குழந்தைகள் யாருமில்லை.
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார், யாருக்கும் தெரியவில்லை. மனைவியின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது ரிங் போனது பதில் இல்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்று அருகே சூர்யாவின் செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னராசு இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிணற்றில் இறங்கி தீயணைப்புத் துறையினர் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடி சூர்யா, உதயனையும் சடலமாக மீட்டனர். லட்சனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.