உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளை (22.01.2024) பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.
அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்திக்கு செல்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமார் 500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் முலம் ஒரு தீர்வு கிடைத்துள்ளது. இந்த நாள் வரலாற்றிலேயே மறக்க முடியாத முக்கியமான நாள்” எனத் தெரிவித்தார்.