சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வீட்டுக்குள் புகுந்த குரங்குகள் மெழுகுவர்த்தியை தட்டிவிட்டதால் ஒட்டுமொத்த வீடே தீயிக்கு இரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காலாப்பூர் பகுதியில் சண்முகசுந்தரம்-ராணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசுகளில் மிச்சமடைந்த பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சண்முகசுந்தரத்தின் குழந்தைகள் அடம்பிடித்து உள்ளனர். எனவே சண்முகசுந்தரம் பட்டாசுகளை வெடிப்பதற்காக மெழுகுவர்த்தியை தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த நேரத்தில் திடீரென வீட்டுக்குள் இரண்டு குரங்குகள் புகுந்துள்ளது. அப்போது குழந்தைகள் அலறி கூச்சலிட்டுள்ளனர். இதனால் குரங்குகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓட முயன்ற பொழுது பட்டாசு வெடிப்பதற்காக ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியை கீழே தள்ளி விட்டுள்ளது.
மெழுகுவர்த்தி பட்டாசு வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்ததால் அதிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த வீடும் எரிந்து சேதம் அடைந்தது. குழந்தைகளை தூக்கிக்கொண்டு தாய் ராணி வெளியே ஓடியதால் இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. எனினும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த ஷோபா, வாஷிங் மெஷின் உட்பட அனைத்துமே எரிந்து சேதமாகியது. குரங்குகளால் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.