மருத்துவ மேல்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கவேண்டிய 27 விழுக்காடு இடங்களை அளிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்து வருகிறது. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ஓரிடம்கூட இல்லை; இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது மத்திய பி.ஜே.பி. அரசு என்பதை உணர்ந்து பிற்படுத்தப்பட்டோர், சமூகநீதியாளர்கள் ஒன்றிணைந்து குமரிமுதல் காஷ்மீர்வரை பிரச்சாரப் புயல் வெடிக்கட்டும்! வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பிக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவக் கல்லூரி மேல்படிப்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இடங்களில், 50 விழுக்காடு இடங்களை, மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதற்கான தேர்வை நடத்தி, அந்த இடங்களை வழங்குகிறது. ஆரம்பத்தில், 15 விழுக்காடு இடங்களை மட்டுமே எடுத்துக்கொண்ட மத்திய அரசு, பின்னர் 30 விழுக்காடு இடங்களையும், தற்போது சில ஆண்டுகளாக 50 விழுக்காடு இடங்களையும் பறித்துக்கொள்கிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலமாக நடைபெற்ற அகில இந்திய மருத்துவ மேல்படிப்பில் மொத்தம் 8,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைப்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 27%, தாழ்த்தப்பட்டோருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்.
8,000 இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 165 இடங்கள் மட்டும்தானா?
ஆனால், பிற்படுத்தப்பட்டோரைப் பொறுத்தவரை, 27% வழங்கப்படவில்லை. இந்திய அளவில் மொத்தம் 8,000 மாணவர்களில், 165 மாணவர்கள்தான் பிற்படுத்தப்பட்டோர் என, அத்துறையின் இணையத்தில் தகவல் தரப்பட்டுள்ளது. கிடைக்கவேண்டிய 2,100 இடங்களுக்குப் பதிலாக 165 இடங்கள்தான் (2% இட ஒதுக்கீடு மட்டுமே) மோடியின் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு அளித்துள்ளது. இந்நிலையைத் தொடர்ந்து திராவிடர் கழகம் எதிர்த்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் வந்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு, மருத்துவ மாணவர்கள் அமைப்பு மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.
மத்திய அமைச்சரின் தவறான தகவல்
பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் கணேஷ் சிங், இது தொடர்பாக எழுத்துமூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினிகுமார் சவ்பே, மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2006 மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் சட்டம் 2006-இன்படி, அரசியல் சட்டப் பிரிவு 15 திருத்தப்பட்டு, உட்பிரிவு 5 சேர்க்கப்பட்டது. இதன்படி, மத்திய அரசின் நிதி பெறும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், அமைச்சரின் பதில், இந்த உண்மையை மறைத்து, நாடாளுமன்றத்தில் தவறான தகவலை தந்துள்ளதாகத்தான் கருதவேண்டும்.
மத்திய அரசின் தொகுப்பில் 8,000 இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27% என்றால், 2,100 இடங்கள் தந்திருக்கவேண்டும். ஆனால், 165 இடங்கள்தான் தரப்பட்டுள்ளன. இதற்கான பதிலை, அமைச்சர் தெளிவாகத் தரவில்லை. இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்படும் இழப்பு 550 இடங்கள்!
கடந்தாண்டில் தமிழ்நாட்டுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டு 700 இடங்கள் மத்திய அரசு தொகுப்புக்குத் தரப்பட்டுள்ளன. இதில் ஓரிடம்கூட பிற்படுத்தப்பட்டோருக்குத் தரப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் சட்ட விரோதமாகும் - அநியாயம்! அநியாயமாகும்!!
அமைச்சரின் பதில், மோடி அரசு, தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சித்து வருவதைத்தான் வெளிப்படுத்துகிறது.
தன்னை ஒரு பிற்படுத்தப்பட்டவராக அறிவித்துக் கொள்ளும் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் சமூகநீதி இதுதானா?
இனி ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்றும், அம்பேத்கரால் பலன் பெற்றதற்கு நானே உதாரணம் என்றும் மனதின் குரலில் (மன் கி பாத்) முழங்கும் மோடியின் ஆட்சியில்தான் பிற்படுத்தப்பட்டவர்களின் சமூகநீதிக் குரல்வளை கொடூரமாக நெரிக்கப்படுகிறது.
மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர் (மண்டல் குழு அறிக்கைப்படி 52 விழுக்காடு) ஓரணியில் திரண்டு நடக்க இருக்கும் அத்தனைத் தேர்தல்களிலும் கடுமையான பாடத்தைக் கற்பிக்கவேண்டும். சமூகநீதிக்குக் குழிவெட்டுவோரின் அரசை சவக் குழிக்குப் போகச் செய்யவேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது - சமூகநீதிக்கு எதிரானது பி.ஜே.பி. அரசு என்ற பிரச்சாரம் குமரிமுதல் காஷ்மீர்வரை ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!
பெரும் பிரச்சாரப் புயலின் சீற்றம் கண்டு மோடி அரசு நடுங்கவேண்டும். சமூகநீதியாளர்களே ஒன்றுபடுவீர்! ஒன்றுபடுவீர்!!
இவ்வாறு கூறியுள்ளார்.