
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரிக்கு ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணிக்கு நேற்று(18.2.2024) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் (தண்ணீர்பந்தல்) மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். கடந்த நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்காக ரூ.44,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அந்த வகையில், முதலமைச்சர் பொறுப்பெற்ற பின்னர், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லுாரி, உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கல்லுாரி, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஒரு மகளிர் கல்லுாரி, விருப்பாட்சியில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம், பழனியில் சித்தா கல்லுாரி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மேலாண்மை இணையம் அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். குஜிலியம்பாறையில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அனுமதி அளித்துள்ளார்கள். ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியானது சின்னக்கவுண்டன்வலசு கிராமத்தில் 01.12.2021 முதல் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், பி.சி.ஏ., பி.எஸ்.சி.(சி.எஸ்.), பி.எஸ்.சி.(சிடிஎப்), பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ.(தமிழ்), பி.ஏ.(ஆங்கிலம்), பி.ஏ.(சைவ சித்தாந்தா) என 8 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. கல்லூரியில் 2024- 2025 கல்வி ஆண்டில் 626 மாணவிகள் பயின்று வருகிறார்கள். 32 ஆசிரியர்கள் மற்றும் 7 ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் 2023- 2024-ஆம் கல்வியாண்டில் 154 மாணவிகள் பட்டப்படிப்பை முடித்துச் சென்றுள்ளார்கள்.
இந்தக் கல்லுாரிக்கு சொந்தக் கட்டடம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் தண்ணீர்பந்தல் தர்ம இடத்தில் சுமார் 8.00 ஏக்கரில் கட்டுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.22.00 கோடி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகளுக்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார்கள். இந்த கல்லுாரிக்கு புதிய கட்டடம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் ஜனவரி மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு மைதானம், மாணவிகள் விடுதி, கலையரங்கம் ஆகியவை கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி என 2 பள்ளிகளும், 4 கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், கூலி வேலை செய்யும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், மலைக் கிராமம் போன்ற தொலைதூர இடங்களிலிருந்து வருபவர்களாகவும் உள்ளனர். மேலும் தங்களது இல்லங்களிலிருந்து காலை 7.00 மணியளவில் புறப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருகை புரிகிறார்கள். ஆதலால் மாணவ, மாணவிகளால் காலை உணவு மற்றும் மதிய உணவு எடுத்து வர இயலவில்லை. மாணவ, மாணவிகளின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்து, முதலமைச்சர் கட்டணமில்லா காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் 16.11.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு சுமார் 4,000 மாணவ, மாணவிகள் பயனந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகளின் நலன் கருதியும் அவர்களின் கோரிக்கையை ஏற்றும் கட்டணமில்லா மதிய உணவு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 26.12.2024 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதிய உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 5,775 மாணவ, மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ்வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நான்கு கல்லூரிகளிலும் அரசு திட்டங்களான "புதுமை பெண் திட்டம் மற்றும் "தமிழ் புதல்வன் திட்டம்" ஆகியவற்றில் 1,206 மாணவிகளும் 840 மாணவர்களும் பயனைடைந்து வருகின்றனர். மேலும் மூன்று கல்லூரிகளிலும் "நான் முதல்வன் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் தலா ஒரு விளைாயட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 2 தேர்வில் 12 பேரும், தொகுதி 4 தேர்வில் 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி அளிப்பதற்காக சென்னை அண்ணா நிறுவனத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதியில் 36 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சு புலமையை வளர்க்கும் விதமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்து உயர் பதவிகளை அடைந்து, இந்த சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், பழனி வருவாய் கோட்டாட்சியர்(பொ) சக்திவேல், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஸ், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, நகராட்சி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் சுவேதா, வட்டாட்சியர் பழனிச்சாமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.