கள்ளக்காதலால் குழந்தைகளுடன் பெண் ஒருவர் எஸ்கேப்பாக, அதனை கண்டுபிடிக்க பெண்ணைக் கூட்டிச்சென்ற இளைஞன் சார்ந்த சமூகத்தினர் மீது கட்டப்பஞ்சாயத்து நடத்தி, 17 வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர் தமிழக அமைச்சர் குடும்பத்தினர்.
காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சரான பாஸ்கரன் அம்பலத்தின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தமறாக்கி. அடிப்படையில் விவசாயம் பார்த்தவர் என்றாலும், சுத்துப்பட்டு மக்களுக்கு இன்று வரை கட்டப்பஞ்சாயத்து பாஸ்கரன் அம்பலம் என்பது தான் நிலையான பெயர். அது மீண்டும் நிரூபணமாயிருக்கின்றது இன்று.! தமறாக்கிக்கு திருமணமாகி வந்தவர் குமாரப்பட்டி கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர் வசந்தி. தன்னுடைய கணவர் பாண்டி சிங்கப்பூரில் வேலை பார்க்க, இரு குழந்தைகளுடன் தனிமையில் இருந்த வசந்திக்கு அருகே வசித்த, வேறொரு சமுதாயத்தை சார்ந்த இளைஞன் திணேஷ்குமாருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று இரு குழந்தைகளுடன் ஊரைவிட்டே எஸ்கேப்பாகியுள்ளனர் இருவரும். காவல்நிலையத்தில் புகார் கொடுக்காத நிலையில் இன்று, அந்த இளைஞன் சார்ந்த சமூகத்தினரின் வீடுகளை குறிவைத்து தாக்கி நொறுக்கி சூறையாடியுள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டது 17 வீடுகள் எனவும், தாக்குதலில் ஈடுப்பட்டது அமைச்சரின் குடும்பத்தினரே என்பது தான் ஹைலைட்டே..!
பாதிக்கப்பட்ட தமறாக்கி சரவணனோ, " ஓடிப் போனவங்களை கொண்டு வந்து ஒப்படையுங்க என அமைச்சரின் மைத்துனர், மகன், மருமகன் கூறிய பிறகு தான் தெரியும், திணேஷ்குமாரும், வசந்தியும் குழந்தைகளோட ஓடிப் போனாங்க என்கின்ற விபரமே..!. முதலில் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள். இப்பொழுது 17 வீடுகளை அடித்து நொறுக்கியிருக்கின்றார்கள். அவன் செய்தது தவறு என்பதை ஒத்துக்கொள்கிறோம். அவன் ஒருத்தன் செய்த தவறுக்கு எங்கள் சமுதாயம் என்ன செய்யும்..? ஓடிப் போன வசந்தி அமைச்சர் சார்ந்த சமுதாயம் என்பதால், அவர்களது குடும்பத்தினர் பெண்ணின் குடும்பத்தாருடன் சேர்ந்து எங்கள் வீடுகளை அடித்து நொறுக்குவதா..? காவல்துறையும் கையைக் கட்டிக்கொண்டு இருக்கின்றது." என்கிறார் அவர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.