திருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே ஈகோ பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 15 மாணவர்கள் படுகாயம் அடைந்தது போலிசார் இடையேயும், பொதுமக்களிடையேயும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி- திண்டுக்கல் சாலை தீரன் நகர் அருகே ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே சீனியர் – ஜீனியர் என்கிற ஈகோ பிரச்சனை சில நாட்களுக்கு முன்பு இருந்தே இருந்து வந்திருக்கிறது. கல்லூரியில் சீனியர் மாணவர்கள் விளையாடும்போது ஜீனியர் மாணவர்கள் மைதானத்தில் உள்ளே நுழைந்து ஒரு கட்டத்தில் அமர்ந்து கொள்வதால் ஈகோ பிரச்சனை வெடித்துள்ளது. இது தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வெடித்து கடைசியில் இன்று கல்லூரி நுழைவுவாயிலுக்கு முன்பாக இரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
கீழே கிடந்த கட்டை, கற்கள், பாட்டில்கள் போன்றவற்றை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பல பேர் உயிருக்கு பயந்து அருகில் இருந்த கடைகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். இருந்தாலும் இதில் 18 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த மாணவர்களில் 15 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் 15 மாணவர்களை காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த உதவி ஆணையர் மணிகண்டன், கலவரத்தில் ஈடுபட்ட 25 பேருக்கு மேற்பட்டோரை பிடித்து கொண்டுவந்து எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறார்.
இதேபோல் சென்னையில் ஜூலை 23ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பேருந்தை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறினர்.
அந்தப் பேருந்திற்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அந்தக் கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். பல மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களையும் துரத்தித் துரத்தி இந்த கும்பல் வெட்டியது. இதன் பிறகு உஷார் ஆன காவல்துறை பேருந்தில் பயணிக்கும் சென்னைக் கல்லூரி மாணவர்களில் 'ரூட்டு தல' என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சென்னை மாநகரக் காவல்துறை அறிவித்திருக்கிறது.
இந்த சம்பவத்தால் உருவான பரபரப்பு சற்று குறைந்துள்ள இந்த நேரத்தில் இதேபோன்ற ஒரு மோதல் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சிக்கிய ரூட்டு தலைகளுக்கு மாவு கட்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.