Skip to main content

“ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையே காரணம்” - அமைச்சர் எ.வ. வேலு பேட்டி

Published on 29/08/2021 | Edited on 30/08/2021

 

pic_6.jpg

 

மதுரை நத்தம் சாலையில் மதுரை - செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (28.08.2021) மாலை ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணுக்கு இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியது.

 

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சிக்கி காயமடைந்துள்ளனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத்துறை படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் நேரில் ஆய்வு  செய்தார். அதேபோல் மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, தல்லாகுளம் உதவி ஆணையர் சுரக்குமார் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இதையடுத்து, விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த மேம்பால விபத்துக்குக் காரணம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “மதுரையில் நகர்ப் பகுதியிலிருந்து நத்தம் சாலையை இணைக்கிற இந்தப் பறக்கும் சாலை மேம்பாலத்தின் நீளம் 7.5 கிலோ மீட்டர். இதில் 5.9. கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் அணுகுசாலை பகுதிதான் தற்போது விபத்துக்குள்ளான பகுதி. இந்த விபத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்த விபத்து ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையால் நடைபெற்றுள்ளது.

 

இத்திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ. 545 கோடி. மும்பையைச் சேர்ந்த ஜேஎம்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைய வேண்டும். இப்பணியைப் பொறுத்தவரையில் இது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் நடக்கும் பணி அல்ல. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறுகின்றன.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்