வேலூர் எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட லத்தேரி, அரும்பாக்கம், ஓட்டூர் போன்ற கிராமங்களில் மழையில் குடை பிடித்தபடி அதிமுக வேட்பார் ஏ.சி.சண்முகத்துக்காக வாக்குசேகரித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வழக்கமான தனது பாணியிலேயே பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் மீதான தாக்குதலே அதிகமாக இருந்தது.

டெல்லியில் ராகுல்காந்தி பிரதமர், தமிழகத்தில் நான் பிரதமர் என்று கூறி பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. மாறாக அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மு.க. ஸ்டாலின் எதுவுமே கொடுக்காமல் குற்றம் சொல்லியே பெயர் வாங்கி வருகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடியார் தெளிவாகக் கூறியுள்ளார். சிங்கம் குட்டி போட்டால் அது சிங்கக்குட்டி. வேறொன்று குட்டி போட்டால் அது வேற குட்டி. இது எடப்பாடியார் அவர்களை அவமரியாதையாகப் பேசும் உதயநிதி ஸ்டாலினுக்குப் பொருந்தும். ஏனென்றால் அவருடைய வளர்ப்பு அப்படி. அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். எடப்பாடியாரை ஒருமையில் பேசுவதால் எடப்பாடியார் ஒன்றும் குறைந்து போகமாட்டார். உதயநிதியெல்லாம் அரசியல் பேசுகிற அளவிற்கு திமுக வந்துவிட்டது.
நேரு, பொன்முடி போன்றவர்கள் இதைப் பார்த்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையான மனச்சாட்சி உள்ளவர்கள் இன்றைய திமுகவில் இருக்க மாட்டார்கள். திமுகவில் மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல் நடக்கிறது. அண்ணா திமுகவில் வாரிசு அரசியல் என்பதற்கு இடம் கிடையாது. நான் சாதாரண ஒரு கூலித் தொழிலாளி. நான் பல்வேறு பதவிகளைக் கடந்து இன்று அமைச்சராக உள்ளேன். ஸ்டாலின் அவரது மகன் உதயநிதிக்காக உழைத்து வருகிறார். துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் வெற்றிக்காக ஓட்டு கேட்டு வருகிறார்.”என்றார்.