
சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பொன்னாங்கண்ணி மேடு, மதுரா, சி.தண்டேஸ்வர நல்லூர் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள 837 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் தில்லைநாயகபுரம் வாய்க்கால் மற்றும் 2 பாசன வாய்க்கால்களையும் சேர்த்து 14.60 கி. மீ நீளத்திற்கு ரூ 22 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி நடைபெற்றது. இந்த பணியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நடப்பாண்டு கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 207 பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல் சிதம்பர நகரத்தின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இருபுற வெளிவட்ட சாலை அமைப்பதற்கு தில்லையம்மன் ஓடை பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி 35 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் சிதம்பர நகரத்திற்கு வந்து செல்லும் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களும் இதில் வந்து செல்லும். இதனால் நகரில் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அவசர ஊர்திகளும் கூட்ட நெரிசலில் மாட்டிகொள்ளாமல் எளிதில் மருத்துவமனைக்கு வந்து செல்லும்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சர்வதேச பறவைகள் மையம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியரை ஆய்வு செய்ய கூறியுள்ளேன். விரைவில் அதை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் சிதம்பரம் பகுதியில் பிடிபடும் முதலையை கொண்டு முதலைப் பண்ணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தி உள்ளேன்”என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர், சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் தினசரி மார்க்கெட் கட்டிட பணி, வெளிவட்ட சாலை தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, சுற்றுலா அலுவலகம் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் துரிதப்படுத்தினார். ஆய்வின்போது சிதம்பரம் வட்டாட்சியர் கீதா, நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் ரமேஷ், விஜயகுமார், தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமார் ராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், நகராட்சி ஆணையர் மல்லிகா, நகராட்சி பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.