சின்னாளபட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் புதிய இடத்தில் வள மீட்பு பூங்கா அமைக்க ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் வத்தலக்குண்டு மற்றும் சின்னாளபட்டி பேரூராட்சி சிறப்பு நிலைப் பேரூராட்சிகளாக உள்ளன. சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 2022 கணக்கெடுப்பின் படி ஜனத்தொகை 35 ஆயிரம் முதல் 45 பேர் வரை உள்ளனர். சின்னாளபட்டியைச் சுற்றி நான்கு கிராம ஊராட்சிகளின் எல்லை இருந்தாலும் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரமாக சின்னாளபட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சி உள்ளது. தினசரி 7 முதல் 10 டன் வரை குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு செம்பட்டி சாலையில் உள்ள வள மீட்பு பூங்காவிற்கு (உரக்கிடங்கு) கொண்டு சென்று அங்கு மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், மற்றும் துணிக் கழிவுகளில் இருந்து மிதியடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சின்னாளபட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் செயல்படுத்துவதால் அருகில் உள்ள தேனி, கரூர், மதுரை, மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளிலிருந்து செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் உரக் கிடங்கிற்கு வந்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுவதைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். இது தவிரத் தினசரி வீடுகளிலிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்கள் வாங்குவதையும் பார்வையிட்டுக் குறிப்பெடுத்துச் செல்கின்றனர். நகரின் வளர்ச்சிக்கேற்ப தற்போது புதிய இடத்தில் கூடுதலாக வள மீட்பு பூங்கா அமைக்கத் திட்டமிட்ட அமைச்சர் ஐ. பெரியசாமி, அதற்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளார். விரைவில் புதிய இடத்தில் வள மீட்பு பூங்கா அமைய உள்ளது. இது தவிர சின்னாளபட்டி பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தவும், புதிதாக மின் மயானம் அமைப்பதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள்.