
திண்டுக்கல் மாநகர் பகுதிகளில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை திண்டுக்கல் மாநகரில் உள்ள நகர் வடக்கு பகுதியான 10வது வார்டு செல்லாண்டியம்மன் கோவில் 1, 2, 3வது தெரு மற்றும் வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஒவ்வொரு வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை கொடுத்து மக்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு வந்தார்.
அதுபோல் மூன்றாவது தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த செல்லாண்டியம்மன் கோவிலுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி இரண்டு லட்சம் ரூபாய் தனது சொந்த பணத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் வசூல் செய்து கோயில் கட்டியதின் பேரில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்களை சந்திக்க வந்த அமைச்சர் ஐ. பெரியசாமி செல்லாண்டியம்மன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் அமைச்சரை வரவேற்று மாலை, சால்வை அணிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு அவர்கள் கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுக்கிறேன் என்று கூறினார். அதோடு தாங்கள் கூறிய அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கச் சொல்லி உடன் வந்த மேயர் இளமதி பிரகாஸிடமும் துணை மேயர் ராஜப்பாவிடமும் உத்தரவிட்டார்.
அதோடு அரசின் நலத்திட்ட உதவிகளான உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் 28 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கும் நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைப் பற்றி பொதுமக்களிடம் அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கினார். இதில் மாநகராட்சி மேயர் இளமதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஆத்தூர் நடராஜன், விவேகானந்தன், வடக்கு பகுதி கழகச் செயலாளர் ஜானகி ராமன், மண்டல தலைவர் ஆனந்த், 10வது வார்டு கவுன்சிலர் பானுப்ரியா ஜெயராம், பத்தாவது வார்டு செயலாளர் சுல்தான் உள்ளிட்ட கிளைக் கழக நிர்வாகிகள் உள்படப் பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.