திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதி, சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 3வது வார்டு வடக்குத் தெரு காளியம்மன் கோவில் எதிரே ரூ.8லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நாடக மேடையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்த விழாவிற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, துணைச் செயலாளர் மார்கிரேட் மேரி, ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி ராமன், பிள்ளையார்நத்தம் முருகேசன், பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபாகனகராஜ், பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், முன்னாள் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் முருகன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் தோப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “1989ம் ஆண்டு ஆத்தூர் தொகுதியில் நான் முதன் முதலாக போட்டியிட்டபோது எனக்கு சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியவர்கள் சின்னாளபட்டி பேரூராட்சி பகுதி மக்கள். காரணம், என்னை எதிர்த்து போட்டியிட்ட(அதிமுக) வேட்பாளரின் உறவினர்கள் இப்பகுதியில் அதிகம் உள்ளனர். இருந்தும் அவர்கள் என்னை நம்பி என் மீது அளவில்லாத பாசம் கொண்டு எனக்கு வாக்களித்தார்கள். அதை நான் என்றும் மறக்க மாட்டேன் இதுபோலத்தான் ஆத்தூர் தொகுதி முழுவதும் தொகுதி மக்கள் என்மீது அளவில்லாத பாசம் கொண்டு தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் எனக்கு வாக்களித்து வருகிறார்கள்.
பணமா? பாசமா? என்ற கேள்வி எழும்பிய போது பாசத்திற்கு கட்டுப்பட்டு வாக்களித்த மக்கள் ஆத்தூர் தொகுதி மக்கள். உயிருள்ளவரை அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். சித்தையன்கோட்டை பகுதியில் இடப் பிரச்சனை ஏற்பட்ட திமுக ஆதரவாளராக இருந்தவரின் இடத்தை சுமார் 200 குடும்பங்களுக்கு வழங்கிய போது அவர் ஒருவர் தான் வருத்தப்பட்டார். ஆனால் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் இன்றும் நமக்காக உறுதுணையாக உள்ளார்கள்.
அதுபோலத்தான் நமது கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் பாதிப்பிற்காக மற்றவர்களை நாம் பழி வாங்க கூடாது. தமிழகத்தில் உள்ள அனைவரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்கித் தந்த தலைவர் ஸ்டாலினின் மக்களுக்கான ஆட்சியில் இல்லங்களை தேடி நலத்திட்டங்கள் வருவதோடு மருத்துவ வசதியும் வருகிறது. இதை நாம் சரியான முறையில் பயன்படுத்தி உயர்நிலையை அடைய வேண்டும்.
இந்த விழாவிற்கு வந்திருக்கும் பலர் திமுகவின் மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் கட்சிக்காக உழைத்த பணியையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் திமுக என்றும் மறக்காது. குறிப்பாக நான் என்றும் மறக்கமாட்டேன். அவர்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செய்வேன்” என்று கூறினார்.