
ஓய்வு பெற்ற ஜ.ஜியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சிவனாண்டி சம்மந்தப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சுஜை ஆனந்த, சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகிய மூவருக்கு எதிராக பாண்டியராஜ் என்பவர் அளித்த புகாரின்படி, மத்திய குற்றபுரிவு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை வாபஸ் பெறும்படி ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தனக்கு நெருக்கடி தந்ததாகவும் பாண்டியராஜ் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜரான பாண்டியராஜனை 10 பேர் கொண்ட கும்பல் கடத்த முயன்ற போது, அவர்களிடம் இருந்து தப்பிய பாண்டியராஜன், கடத்தல் தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமீன் வழங்க கோரி 70 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டை முற்றுக்கையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது சம்மந்தமாக சென்னை பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது.
இந்த மூன்று வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் 50 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி சிபிசிஐடி போலீஸார் சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாண்டியராஜ், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என் பிரகாஷ், மோசடி வழக்கை திரும்ப பெற மனுதாரருக்கு ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி அழுத்தம் கொடுத்ததற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும், தலைமை நீதிபதி வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் சிவனாண்டி செல்போனில் பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.