நீர் வரத்து குறைந்தது மற்றும் டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக சரிந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பின. அவற்றில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரின் காரணமாக, மேட்டூர் அணையின் நிரம்பியது.
கடந்த ஜூலை மாதம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் மேட்டூர் அணை மூன்று முறை முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைந்தது. நேற்று (டிசம்பர் 19) மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1092 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 1000 கன அடியாக குறைந்தது.
நீர்வரத்து குறைந்ததால் படிப்படியாக அணை நீர்மட்டமும் குறைந்து வருகிறது. கடந்த 14ம் தேதி அணை நீர்மட்டம் 100.74 அடியாகவும், 15ம் தேதியன்று 100 அடியாகவும் இருந்தது. நேற்று அணை நீர்மட்டம் 96.56 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் சரிந்து 95.42 அடியாக இருந்தது.
அதேநேரம், டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 16500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.