தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் எமிஸ் என்ற கல்வி மேலாண்மை செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் மாணவர்களின் உடல்நலம் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அச்செயலியில் இடம்பெற்றிருந்த உடல்நலம் குறித்த 64 வகையான கேள்விகளில் மாணவிகளின் மாதவிடாய் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையான நிலையில், பள்ளிக்கல்வித்துறை இது குறித்து விளக்கமளித்துள்ளது.
மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவிகளுக்கு ஏற்படுத்தவும், அவர்களின் உடல்நலன் மீதான அக்கறை காரணமாக மட்டுமே இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஆசிரியைகள் தான் மாணவிகளிடம் இது தொடர்பான கேள்வியைக் கேட்டு பதிவேற்றம் செய்வதாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.