தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால், மருத்துவ செலவு எகிறிவிடும் என்பதை அனுபவரீதியாக அறிந்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.
சிவகாசியை அடுத்துள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வெறிநாயிடம் கடிபட்ட தங்களின் இரண்டு குழந்தைகளையும், நம்பிக்கையுடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்த அரசு மருத்துவர் “நாய்க்கடிக்கு இங்கே மருந்து இல்லை.. வெளியே தனியார் மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்கிட்டு வாங்க.. அப்பத்தான் சிகிச்சை அளிக்க முடியும்.” என்று சொல்ல.. பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகளான அந்தப் பெற்றோர், செய்வதறியாது தவித்திருக்கின்றனர். பலரிடமும் அழுது கெஞ்சி, கடன் வாங்கி, தனியார் மருந்தகமான லட்சுமி மெடிக்கல்ஸுக்குச் சென்று, ரூ.10,500 விலையுள்ள நாய்க்கடிக்கான மருந்தை வாங்கியிருக்கின்றனர். அந்த மருந்தைக் கொடுத்த பிறகே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிந்திருக்கிறது.
‘சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான மருந்து இல்லை; பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லை” என்பது போன்ற புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே சிவகாசி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.