Hindi language is not mandatory says Maharashtra government backtracks after strong opposition

Advertisment

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை கடந்த 18ஆம் தேதி மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசு அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம், வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தது மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசியிருந்தார். புதிய கல்விக் கொள்கை மூலம் மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிக்கும் நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், லட்சுமிகாந்த் தேஷ்முக் தலைமையிலான மொழி ஆலோசனைக் குழு, நடைமுறை மீறல்கள் மற்றும் மொழி திணிப்பு குறித்த கவலைகளை தெரிவித்து மாநில அரசுக்கு கடிதம் எழுதியது. இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தில் பெரும் சர்ச்சையானதால், மகாராஷ்டிராவில் மராத்தி கட்டாயமாகவே உள்ளது என்றும், இந்தி மொழி திணிக்கப்படவில்லை என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென பல்டி அடித்தார்.

Advertisment

இந்த நிலையில், பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி இருக்கும் என்ற முடிவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூஸ் தெரிவிக்கையில், ‘பள்ளிகளில் மராத்தி மற்றும் ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்கும். அரசாங்க தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, இந்தி கட்டாயமானது என்ற சொல் நீக்கப்படும். இந்தி ஒரு விருப்பப் பாடமாக இருக்கும். இந்தி கற்க விரும்பும் மாணவர்கள், மராத்தி மற்றும் ஆங்கிலத்துடன் சேர்த்து அதைப் படிக்கலாம். திருத்தப்பட்ட மொழிக் கொள்கையை கோடிட்டு காட்டும் புதிய அரசாங்க தீர்மானம் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.