கர்ப்பிணியான காதலியை காதலனே எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் காதலியை கொலை செய்த காதலன் மற்றும் அவனது கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி அடுத்த ஆரோவில் முந்திரி காட்டு பகுதியில் கடந்த 30ம் தேதி தீயில் எரிந்து கருகிய நிலையில் ஒரு கர்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அந்த பெண்ணை கொலை செய்து கொலையாளிகள் தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு விசாரணையை கையில் எடுத்தனர். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேட்டை சேர்ந்த அப்பாதுரை என்பவர் தனது சகோதரியை காணவில்லை என்று கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரிடம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை காட்டியபோது அது அவரது சகோதரிதான் என்று ஊர்ஜிதமானது.
இதையடுத்து எரித்துக் கொல்லப்பட்ட பெண் புதுச்சேரி நேரு வீதியில் பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்த லட்சுமி என்பது தெரியவந்தது. தனது தந்தை இறந்துவிட்டதால் குடும்ப கஷ்டத்தை போக்க லட்சுமி வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. கடையில் விசாரித்தபோது கடந்த 30ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது லட்சுமியை வேன் டிரைவர் அருண்குமார் என்பவன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அருண் குமார் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னல் மூலம் அவன் முப்பதாம் தேதி எங்கெல்லாம் சென்றான் என்ற விவரங்களை சேகரித்த காவல்துறையினர் அவனை பிடித்து விசாரித்தனர்.
இதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அருண்குமார் தெரிவித்ததால் அவனை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அதன்பிறகு உண்மையானது வெளிவந்தது. பாத்திரக் கடைக்கு வேனில் சரக்கு ஏற்றி வரும் அருண்குமாரும் லட்சுமியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமண ஆசை காட்டி லட்சுமியிடம் அருண் எல்லை மீறியதாக கூறப்படுகிறது. லட்சுமியின் காதலுக்கு அவரது வீட்டில் பச்சைக்கொடி காட்டப்பட்ட நிலையில் அருண்குமார் திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளான். இதற்கிடையில் லட்சுமி கர்ப்பம் ஆனதால் இதனை தொல்லையாக நினைத்து லட்சுமியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்ட அருண் கடந்த 30ம் தேதி பாத்திரக்கடையில் பணி முடிந்து வீடு திரும்பிய லட்சுமியிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றான்.
தனிமையில் லட்சிமியிடம் கர்ப்பத்தை கலைக்க சொல்லி வலியுறுத்தியுள்ளான் அருண். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த லட்சுமி காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது உருட்டுக்கட்டையால் தாக்கியதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக சடலத்தையும் அழிக்க திட்டமிட்டு அருண் தனது கூட்டாளி ஒருவனை வரவழைத்துள்ளான்.
இருசக்கர வாகனத்தில் இருவருக்குமிடையில் லட்சுமியின் சடலத்தை அமரவைத்து ஆரோவில் முந்திரி காட்டு துக்கிச்சென்று சடலத்தை வீசியுள்ளனர். கொலை செய்யப்பட்ட லட்சுமி முகம் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து லட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர். லட்சுமியின் சடலம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அருண்குமார் போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.
இந்நிலையில் அவனையும் அவனது கூட்டாளியையும் கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு சாட்சியான முக்கிய தடயங்களை சேகரித்து வருகின்றனர்.