ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மூலம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் யூனியன் சேர்மன், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல்கள் இன்று 27 மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான அதிமுகவினர் பல்வேறு இடங்களில் வன்முறையும் எதிர்க் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதும், மிரட்டியதும் என மறைமுகத் தேர்தல் வெளிப்படையாகவே அலங்கோலமாக நடந்தது.
இதில் உச்சகட்டமான ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 8 ஒன்றியங்களையும், திமுக 4 இடங்களையும் கைப்பற்றியது. ஈரோடு யூனியன் சேர்மன் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இங்கு இரு கட்சிகளும் சமநிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் ஏற்கனவே கடத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று வாக்களிக்க வரவில்லை இதனால் ஈரோடு யூனியன் சேர்மன் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட இன்னொரு யூனியன் தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் தலைவர் பதவிக்கு, தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் கவுன்சிலர்களின் வெற்றிபெற்றவர்கள் அதிமுகவினர் மூன்று பேர் மட்டுமே, மீதி 10 பேர் திமுகவினர்தான். ஆக இங்கு மெஜாரிட்டியாக திமுக வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில் இன்று காலை தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு உறுப்பினர்களும் திமுக சார்பில் தலைவர் பதவிக்கு நின்ற வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டு வந்தனர். திடீரென எழுந்த அதிமுக கவுன்சிலர் நடராஜ் என்பவர் தேர்தல் அதிகாரி வசம் இருந்த ஓட்டுச் சீட்டுகளை கிழித்துப் போட்டுவிட்டு அங்கு இருந்த வாக்கு பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் பிடி பிடி பிடி என சத்தம் போட்டு அவரை துரத்திக்கொண்டு ஓடினார்கள். கடைசியில் போலீசிடம் மாட்டினார். அதிமுக கவுன்சிலர் நடராஜ் அதற்குள் அந்த வாக்குப் பெட்டியில் இருந்த ஓட்டுக்களை எல்லாம் கிழித்துப் போட்டு விட்டார். இதனால் அந்த இடம் பதட்டமாக மாறியது.
இதை சாக்காக வைத்து தேர்தல் அதிகாரி தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் சேர்மன் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்து விட்டார். ஒரு அதிமுக கவுன்சிலர் வாக்குப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடியது அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பாகவும், கேலியாகவும் பேசப்பட்டு வருகிறது.