கரோனா தொற்றைக் குணப்படுத்துவதைவிட தொற்று பரவாமல் தடுப்பதே சிறந்தது என்பதை உணராமல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சாதாரண நோயாளிகளுக்கும் கரோனா தொற்று பரவும் அவலம் பொதுமக்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.
திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையே பிரதானமாக பயன்படுத்திவருகின்றனர். இங்கு தினசரி திருவாரூர் மட்டுமன்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்தச் சூழலில், தற்போது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, ஊரடங்கு உள்ளிட்ட அதிரடி திட்டங்களை அரசு கையாண்டுவருகிறது. இறப்பு விகிதமும் சராசரியாக அதிகரித்தபடியே இருக்கிறது. திருவாரூர் மாவட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல.
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கரோனா தொற்று நோயாளிகள் அனைவரும் திருவாரூர் மருத்துவமனையிலேயே மருத்துவ வசதி பெறுகின்றனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு கரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், சிகிச்சை பெறுவதற்குப் புற நோயாளிச் சீட்டு பெற வேண்டியுள்ளது. மற்றவர்கள் புற நோயாளிச் சீட்டு வாங்கும் இடத்திலேயே கரோனா நோயாளிகளுக்கும் புற நோயாளிச் சீட்டு வழங்கப்படுகிறது.
கரோனா நோயாளிகளுக்கு என பிரத்தியேகமாக சீட்டு வழங்கும் நடைமுறை ஏதும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பின்பற்றப்படவில்லை. எனவே, கரோனா தொற்று நோயாளியோ அல்லது அவர்களது உறவினரோ புற நோயாளிச் சீட்டு வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக தொற்று இல்லாமல் புற நோயாளியாக சிகிச்சை பெறும் சாதாரண பொதுமக்களுக்கு கூட தொற்று பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்களிடம் கேட்டபோது, "மிகுந்த அச்சத்துடனே புற நோயாளிச் சீட்டு பெற வேண்டியுள்ளது. அங்கு கரோனா நோயாளியே சிலநேரங்களில் நேரடியாக வந்து புற நோயாளிச் சீட்டு பெறுகின்றனர். எங்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்கிற பெரும் அச்சம் எழுந்துள்ளது" என்கிறார்கள்.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜிடம் கேட்டபோது. "கரோனா வார்டு பகுதியிலதான் புற நோயாளிச் சீட்டு வழங்கும் நடைமுறை உள்ளது" என்கிறார்.
"தற்போதுவரை கரோனா வார்டு பகுதியில் புறநோயாளிகள் சீட்டு வழங்கப்படவில்லை. கரோனா தொற்றைக் குணப்படுத்தும் பணியைவிட கரோனா தொற்றை எளிதாக மற்றவருக்குப் பரப்பும் வேலையையே செய்யுறாங்க” என்கிறார்கள் புறநோயாளிகள்.