ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் வந்த பெண்களை திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்தவர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கைதான நபர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறும் வீடியோ வைரலாகி இருந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு கேள்விகளை வைத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈசிஆர் கார் துரத்தல் சம்பவத்தில் கைதான சந்துரு அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவன் எனக் கூறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. காரில் கட்சிக்கொடி இருந்ததால் திமுக மீது வீண் பழி சுமத்தி சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடிகள் கிழிந்து தொங்குகிறது. திமுக ஆட்சியின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களில் உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்சோ குற்றங்களில் அதிமுகவை சேர்ந்தவர்களும் சிக்குகின்றனர். ஒவ்வொரு குற்றச்செயலின் பின்புறத்தையும் ஆராய்ந்தால் அந்த குற்றத்தின் பின்னணியில் அதிமுகவை சேர்ந்தவர்களும் உள்ளனர். திமுக மீது பொய் பழிபோட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்வார்கள்? ஈசிஆர் கார் துரத்தல் சம்பவத்தில் வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.