திருச்சி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மணப்பாறை சிப்காட்டில் சாரண சாரணியர் வைர விழாவில் கலந்து கொண்டார். நிகழ்வின் மேடையில் அவர் உரையாற்றி பேசுகையில், ''இந்தியா முழுவதும் 80 லட்சம் மாணவர்கள் சாரண சாரணியர் இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 12 லட்சம் மாணவர்கள். எட்டில் ஒரு பங்கு நாம் இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பங்கு என்பது எப்பொழுதும் அதிகமாக தான் இருக்கும் என்பதை சாரணர் இயக்கத்திலும் உண்மையாக்கி இருக்கிறோம். நீங்கள் பங்கு வகித்திருக்கும் சாரணர் இயக்கம் என்பது உடலினை உறுதி செய்யும் இயக்கமாக, உள்ளத்தை உறுதி செய்யும் இயக்கமாக, ஒழுக்கத்தை உருவாக்கக்கூடிய இயக்கமாக, ஒழுங்கை உருவாக்கும் இயக்கமாக இருக்கிறது. உங்கள் எல்லோரையும் இந்த சீருடைகள் பார்க்கும் பொழுது என்னுடைய உள்ளம் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் நாளைய குடிமக்களான இளைய தலைமுறையிடம் சமூக சேவை செய்தல்; உற்று நோக்குதல்; அறிவுத்திறனை வளர்த்தல் போன்ற பல்வேறு திறன்களை வளர்ப்பதில் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது. இந்த நேரத்தில் நான் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும்.
மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. இளைய தலைமுறையை இனிய தலைமுறைகாக இந்த சாரணர் இயக்கம் மாற்றுகிறது. ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் ராணுவ வீரரான பேடன் பவல் இந்த இயக்கத்தை தொடங்கினார். சாரணர் இயக்கத்தின் இந்த பெரும் திரள் அணி ஒவ்வொரு நாட்டிலும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 18 பெருந்திரள் அணிகளும், ஐந்து சிறப்பு பெருந்திரள் அணிகளும் நடந்திருக்கிறது. 2000 ஆவது ஆண்டில் தமிழ்நாட்டில் சாரணர் சாரணியர் இயக்கப் பொன்விழா பெருந்திரள் அணி நடந்த பொழுது தமிழ்நாட்டினுடைய முதல்வராக இருந்த கலைஞர் அன்று அதை நடத்தி காட்டினார். இப்பொழுது வைர விழா கொண்டாடும் பொழுது நான் முதலமைச்சராக இருக்கிறேன்.
கலைஞர் தான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை உருவாக்கியது அவர்தான். எனவே அவருடைய நூற்றாண்டு விழாவை நீங்கள் கொண்டாடுவது பொருத்தமானது. நாம் எல்லோரும் சமத்துவத்தோடும் சகோதரத்துவ உணர்வோடும் ஒன்றிணைந்து இந்தியர் என்ற பெருமிதத்தோடு ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வந்த வகையில் இந்தியாவினுடைய பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் ஒற்றுமையாக ஒரே இடத்தில் ஒன்றுகூடி தங்களுடைய பண்பாட்டை பகிர்ந்துகொள்ளவும் அன்பை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த மாபெரும் பெருந்திரள் அணி வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முதுமொழிக்கேற்ப சவுதி அரேபியா, மலேசியா, இலங்கை, நேபாளம், இந்தியாவை சேர்ந்த பல மாநிலங்களில் இருந்து ஒருங்கிணைந்து கடந்த ஆறு நாட்களாக ஒரே குடும்பமாக இருப்பது தான் நம் அன்பினுடைய வலிமை.
இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் பெருமைகளையும் பண்புகளையும் பற்றி புரிந்து கொண்டிருப்பீர்கள். அதேபோல் வெளிநாட்டவர் மற்றும் வெளிமாநிலத்தவர் பெருமைகளை பண்பாட்டை நம் மாணவர்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள்''என்றார்.