தக்கலையில் வயதான தம்பதியினர் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு உணவில்லாமல், கவனிப்பு இல்லாமல் தோட்டத்து ஒதுக்குப்புற வீட்டில் இறந்து பலநாட்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சாரோடு அணை, தக்கலையை சேர்ந்த வயதான தம்பதிகள் செல்வம்-ஞானம்மாள். செல்வத்திற்கு வயது 90. ஞானம்மாளுக்கு வயது 85. இவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். முதல் மகன் இறந்துவிட இரண்டாவது மகன் பொன்னையன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகன் பொன்னுசாமி தக்கலையிலேயே அவரது மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் வயதான பெற்றோர்களை வீட்டில் சேர்த்தாமல் தோட்டத்திலுள்ள ஒரு ஒதுக்குப்புற வீட்டில் தங்கவைத்து விட்டு சென்றுவிட்டார் பொன்னுசாமி. வயது முதிர்ந்த இருவரும் உண்ண உணவின்றி, சரியான பராமரிப்பின்றி அந்த வீட்டிலேயே இருந்துவந்தனர். அந்த பகுதியில் வரும் சிலர் கொடுக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் தொகையை வைத்து தக்கலையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்கிவந்து தன் மனைவிக்கு உணவளித்து வந்தார் ஞானம்மாளின் கணவர் செல்வம்.

அப்படி அவர்கள் வாங்கும் அந்த உணவை நான்கு ஐந்து நாட்கள் வைத்து சாப்பிடும் அளவிற்கு இருவரும் யாருடைய கவனிப்புமே இல்லாமல் இருந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் மனைவி ஞானம்மாள் படுத்தபடுக்கையாக செல்வத்தின் நடமாட்டம் மட்டும் அவ்வப்போது அப்பகுதி மக்களுக்கு தெரியும்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நடமாட்டம் எதுவும் இல்லாத நிலையில் சிலர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறந்துவைத்த நிலையில் இருவரும் அழுகி துர்நாற்றத்துடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ந்து அவரது மகன் பொன்னுமசாமிக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பொன்னுசாமி வராததால் தகவல் போலீசாருக்கு சென்றது. உடனே போலீசார் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் இருவர் சடலத்தையும் மீட்டு அடக்கம் செய்ய உதவினர். அதன்பின் போலீசார் தரப்பில் மகன் பொன்னுசாமி அழைக்கப்பட்டதால் பொன்னுசாமி நேரில் வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஊர் மக்கள் வசை மொழிகளால் பொன்னுமசாமியை திட்டினர்.


பெற்ற தாய் தந்தையை கவனித்துக்கொள்ளாமல், இப்படி இறுதி காலத்தில் எந்த கவனிப்பும் இல்லாமல் அவர்கள் அனாதைகளை போல கேட்பாரற்று இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது. ''பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு'' என்பதற்கேற்ப தன்னுடைய பின் காலத்தில் தாமும் இந்த நிலைக்குதான் தள்ளப்படுவோம் என யோசிக்காமல் சிலர் வயதான பெற்றோர்களை சுமையாக நினைப்பதுதான் மனிதாபமின்மையின் உச்சம்.