திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே கடுகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமிகாந்தனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்ற லட்சுமிகாந்தன் அதன்பின் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், வீட்டின் அருகே வயல்வெளியில் லட்சுமிகாந்தன் அழுகிய நிலையில் அடுத்த நாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்த பெரணமல்லூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஈஸ்வரி செய்யாறு சிப்காட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே சிப்காட்டில் பணிபுரிந்து வரும் உதயசூரியன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஈஸ்வரி தன்னை திருமணம் செய்துகொள்ள உதயசூரியனை வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு உதயசூரியன் ஈஸ்வரியிடம், “உன்னுடைய கணவன் லட்சுமிகாந்தனை கொன்றால் தான் நான் திருமணம் செய்து கொள்ளமுடியும்” என்று தெரிவித்தாராம். இதையடுத்து கடந்த வாரம் உதயசூரியன், அவருடைய மைத்துனன் பாண்டியன் மற்றும் ஈஸ்வரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து லட்சுமிகாந்தனை மது அருந்த அழைத்துச் சென்று கழுத்தை நெரித்தும் கழுத்தை கத்தியால் அறுத்தும் கொன்றுவிட்டு அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி, உதயசூரியன் மற்றும் பாண்டியன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.