மதுரையில் தொல்லியல்துறை அகழாய்வு பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி பார்வையிட்டனர்.
அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி கிருபாகரன், "தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையான விஷயம்; வெளிநாடுகள் மோகம் அதிகமாகிவிட்டது. தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் பண்பாடு. பழமையை காக்க வேண்டுமே தவிர அழிக்கக் கூடாது; எந்த கலாச்சாரத்திற்கும் மொழிதான் அடையாளம். பழமையும், பண்பும் மறந்து போய்விட்டதற்கு முதியோர், அனாதை இல்லங்கள் அதிகரிப்பே ஆதாரம். பழமையான மொழியை ஏற்கும் மனோபாவம் தேவை; தங்கள் மொழிதான் பெரியது, சிறியது என்ற எண்ணம் கூடாது. தமிழும், ஐம்பெரும் காப்பியங்களும் சமணத்தைத்தான் பேசுகிறது." என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி புகழேந்தி, "7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கிருபாகரனின் கருத்தால் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டு உதவ முன் வந்துள்ளன. ஏழை மாணவர்களுக்கு அதிக மருத்துவ இடம் கிடைக்க 7.5% உள்ஒதுக்கீடு வழக்கை கையாண்ட விதமே காரணம்." என்றார்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து பயிலமுடியாதவர்களுக்கு ஏன் கட்சிகள் உதவக்கூடாது என நீதிபதி கிருபாகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.