Skip to main content

ஆசிரியர் தினத்தில் மாணவியின் கழுத்தை பிடித்து தூக்கிய ஆசிரியர் ! கல்வி அதிகாரி விசாரணை

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
ட்

 

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த மாந்துறையில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஜோன்ஆப்ஆர்க் சைலா பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மகள் பத்மபிரியா 7ம் வகுப்பு படிக்கிறார். 

 

மாணவி பத்மபிரியா சமீபத்தில் தொண்டையில் ஆபரேஷன் செய்துள்ளார். இவர் பாடத்தை மெதுவாக எழுதுவதால் ஆத்திரப்பட்ட ஆசிரியர்,  ஆசிரியர் தினத்தன்று மாணவியின் கழுத்தை பிடித்து மேலே தூக்கியிருக்கிறார். இதனால் வீடு திரும்பும் போது தொண்டை மீண்டும் வலி எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

 

வீட்டில் இரவு உணவு சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார். விசயத்தை தன் மகள் மூலம் தெரிந்து கொண்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உறவினர் என பெரிய கூட்டமே அடுத்த நாள் காலையில் பள்ளியில் சென்று ஆசிரியர் சைலாவிடம் கேட்டுள்ளனர். 

 

பெற்றோர்கள் பொதுமக்கள் வந்து கேள்வி மேல் கேள்வி கேட்கவும் ஆசிரியர் தன்னுடைய கை பையை எடுத்துக்கொண்டு விருட்டென வெளியே சென்றுள்ளார். 

 

விசயத்தை கேள்விப்பட்ட லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன் பள்ளிக்கு வந்து பெற்றோர் உறவினர் , மாணவிகள் என அனைவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். 

 

அப்போது ஆசிரியர் மீது பெற்றோர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். பிரச்சனையை விசாரித்துக்கொண்டு இருக்கும் போதே பத்மபிரியாவின் சக மாணவிகள் ஆர்த்தி பவதாரணி ஆசிரியர் எங்களையும் பிரம்பால் அடித்தார் என்றும், கடந்த மாதத்தில் 9ம் வகுப்பு படிக்கும் ராஜேஸ்வரியை பிரம்பால் அடித்தார் என்றும் இதே போல தொடர்ந்து மாணவிகளை அடிக்கடி பிரம்பால் அடிப்பதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். 

 

மனுவை பெற்றுக்கொண்ட கல்வி அதிகாரி அறிவழகன், ஆசிரியை ஜோன்ஆப்ஆர்க் சைலா தன்னிசையாக செயல்படுவதாக புகார் வந்ததன்பேரில் பள்ளியில் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளேன். மேலும் மாணவிகளை அடித்த புகார் மனு குறித்து தலைமை ஆசிரியை உமா ராணியிடமும், ஆசிரியை ஜோன்ஆப்ஆர்க் சைலாவிடமும் விளக்கம் கேட்டு அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் கூறினார். 

ஆசிரியர் தினத்தன்று கழுத்தை பிடித்து தூக்கிய இந்த  பிரச்சனை பூதாகரமாக கிளம்பியிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்