தூத்துக்குடி வடக்கு மாவட்ட கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையயை மூட வலியுறுத்தியும் பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடங்களின் மூலமாக இணைந்த இளைஞர்கள், பெண்கள், சிறு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என 100க்கும் மேற்பட்டவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான காவிரி நீரை வழங்கவேண்டும், வாழ்வை அழித்து நாசம் செய்யும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு, மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் நடத்துவதற்கு முறையாக அனுமதி வாங்கி இருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இந்த போராட்டம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக போராட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.