
தமிழகத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு வெளியான நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில் பேருந்துகளை இயக்கும்போது செய்யவேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பேருந்து முனையங்கள் ஒவ்வொரு நாளும் இருமுறை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படும். குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு வரும்போது அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். அதன் பின்னரே பணிக்கு அனுமதிக்கப்படுவர். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு ஒரு பாட்டில் கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும். பேருந்தில் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்தின் படிக்கட்டு அருகே கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். பேருந்தில் செல்லும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் (அல்லது) வாய் மற்றும் மூக்குப்பகுதியை துணியைக் கொண்டு மூடியிருக்க வேண்டும். பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். காய்ச்சல், சளி, இரும்பல் அறிகுறி உள்ளவர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பயணச்சீட்டு பரிசோதகர்கள் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆங்காங்கே பரிசோதித்து உறுதி செய்வர். பேருந்து பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை QRcode முறையை பயன்படுத்தலாம். மாதாந்திர பயண சலுகை அட்டை அனைத்து பேருந்து நிலையங்களிலும், முக்கிய அரசு அலுவலகங்களிலும் கிடைக்கும். ரொக்கம் கொடுத்து பயணச்சீட்டை வாங்கும் முறையும் நடைமுறையில் இருக்கும்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம். சோதனை முடிவில் கரோனா பாசிட்டிவ் என தெரியவந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். கரோனா நெகட்டிவ் என தெரியவந்தால் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அலுவல் ரீதியாக பயணம் மேற்கொண்டு இரண்டு நாட்களில் திரும்பி வந்தால் தனிமைப்படுத்தல் அவசியமில்லை. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் இருந்து ரயிலில் வருவோர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே அறிகுறி இல்லாவிடினும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை. மண்டலங்களுக்குள் வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மண்டலங்களுக்கு இடையே பயணிப்பவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படும்." இவ்வாறு தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.