சமீப காலங்களில் நீலகிரி மாவட்டம் அம்பிகாபுரம் பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரத்தில் வசித்து வரும் பொறியாளரான முருகன் என்பவருக்கு சொந்தமான பங்களா வீட்டில் கடந்த 7 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், அந்த வீட்டில் இருந்த நாய் வழக்கத்தை விட அதிக அளவில் குரைத்துள்ளது. இந்தச் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து முருகனின் பங்களாவில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்த சிசிடிவி கேமராவில், முருகனின் பங்களா வீட்டின் மாடிப் பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்து, அங்கிருந்த நாயை தாக்க முயன்று பங்களா முழுவதும் துரத்தி உள்ளது. சிறுத்தையின் பிடியில் சிக்காத வளர்ப்பு நாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதையடுத்து, வீட்டுக்குள் இருந்த சிறுத்தை அங்கிருந்து சென்றது அந்தக் காட்சியில் பதிவாகி உள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊருக்குள் உலாவி வரும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். குடியிருப்புப் பகுதியில் எவ்வித பயமும் இன்றி சாதாரணமாக உலா வந்த சிறுத்தையின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.