தமிழக அரசு ஏற்கனவே வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியாக ஐந்தேகால் லட்சம் வழங்கி வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இதை ஏழு லட்சம் என்று உயர்த்தி அறிவித்தனர். ஆனால், அது வெறும் அறிவிப்போடு நின்றுபோனது நடைமுறைப்படுத்தவில்லை. திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் மத்தியிலும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர்.
வழக்கறிஞர் சங்க தலைவர் சிவாஜிசிங், செயலாளர் அசோக், சிபிஎம் கட்சி வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சந்திரசேகர், சங்கரையா, குமரகுரு, மூத்த வழக்கறிஞர்கள் பட்டி முருகன், பூமாலை குமாரசாமி, திமுக வழக்கறிஞர் அருள் உட்பட ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த பொதுமக்களுக்கும் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர்.