கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (40). கட்ட கூலித் தொழிலாளியான இவர், மீன்பிடித் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் தொட்டியபட்டியில் உள்ள குளத்தில் மீன் பிடிப்பதற்காக நேற்று வலையை வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வலையை எடுப்பதற்காக குளத்திற்கு சென்றுள்ளார். மீன் பிடி வலையை எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். காலை அக்குளத்தின் வழியாக வந்த பொதுமக்கள் சிவசுப்பிரமணியன் நீரில் மிதந்ததைக் கண்டு லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாலாபேட்டை போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலித்தொழிலாளி மீன் பிடிப்பதற்கு குளத்தில் இறங்கி சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.