உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் நேற்று முன் தினம்(14ம் தேதி) குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இது வரை பாகிஸ்தானிடம் தோற்றதே கிடையாது எனும் வரலாற்றை தக்க வைத்தபோதிலும், இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கில் இருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அதேபோல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மீண்டும், ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். என தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வருகிற 2029 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் நடைமுறைக்கு வரும். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 3 மாத காலம் தான் இருக்கிறது என்பதால், இது 2029 ஆம் ஆண்டின் போது நடைமுறைப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார்கள். மேலும், இந்த சட்டத்தை வழிமுறைப்படுத்துவதற்கு நிறைய காலம் தேவைப்படுகிறது. அதனால், அதற்கு விசாரணை குழு ஒன்றை அமைத்து நாடு முழுவதும் ஆய்வு செய்த பிறகு தான் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இருப்பார்கள். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்து அந்த நேரத்தில் சொல்வார்கள். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை என்பது தனி சுதந்திரமிக்க அமைப்புகள். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கொண்டு அவர்கள் அந்த சோதனைகளில் ஈடுபடுகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆ.ராசா போன்றோர்கள் மக்கள் வரிப் பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதனால், அமலாக்கத்துறை சோதனையின் மூலம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அகமதாபாத் மைதானத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்பியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ இதற்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டுமென்றால் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’... என்று கூறியபடியே நகர்ந்து சென்றார்.