கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி (70). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். பிப். 20ம் தேதியன்று, வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்து இருந்தார்.
அப்போது அந்த வழியாக இளைஞர் ஒருவர் குடிபோதையில் வந்து கொண்டிருந்தார். இதைக் கவனித்த மூதாட்டி, அந்த வாலிபரை அழைத்து புத்திமதி சொல்லியுள்ளார். அப்போது திடீரென்று அந்த வாலிபர், மூதாட்டி மீது பாய்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, தன் முழு பலத்தையும் பிரயோகித்து, குடிபோதை ஆசாமியை கீழே தள்ளிவிட்டார். அவருடைய கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்தினரும் திரண்டு விட்டனர். இதுகுறித்து மூதாட்டி சுந்தரி, கல்லாவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் குடிபோதை ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் அவர், கல்லாவி அருகே உள்ள பெருமாள்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் (19) என்பதும், இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும், குடிபோதையில் மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதும் தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.