குமிலியிலிருந்து, நாகர்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து நேற்று மாலை நெல்லை வந்தது. அதன்பின் மாலை 6 மணியளவில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது.
அப்போது அந்த பேருந்தில் நெல்லை ஆயுதப்படையை சேர்ந்த காவலர்களாக தமிழரசன் மற்றும் மகேஷ் இருவரும் பணிநிமித்தமாக கூடங்குளம் செல்ல ஏறியுள்ளனர். பேருந்து மூன்றடைப்பு பகுதிக்கு வந்தபோது பேருந்து நடத்துனர் ரமேஷ், காவலர்களிடம் டிக்கெட் எடுக்க கேட்டுள்ளார். ஆனால் காவலர்கள் இருவரும் பனி நிமித்தமாக செல்வதாகவும், வாரண்டை காட்டுவதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் நீண்ட நேரம் ஆன நிலையில், நடத்துனர் மீண்டும் காவலர்களிடம் டிக்கெட் குறித்து பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலில் நடத்துனர் காவலர்களால் தாக்கப்பட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதை பேருந்தில் உள்ள பயணிகள் சிலர் தட்டிக்கேட்டுள்ளனர். பின்னர் காயமடைந்த நடத்துனர் ரமேஷ் மூன்றடைப்பு காவல்நிலையத்தில் இரண்டு காவலர்கள் மீதும் புகாரளித்தார். அதன் அடிப்படையில் காவலர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலையில் காயமடைந்த ரமேஷ் நாங்குனேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையானஆசாரிக்குளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதனிடையே காவலர்கள் இருவரும் கண்டக்டர் ரமேஷ் மீது புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சபாபதி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த பேருந்து முறையான அனுமதியின்றி குமிலியிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே இந்த வழக்கு பதிவு, அரசு நிர்வாக தரப்பில் புகார் செய்யவும் காலதாமதம் ஆகியுள்ளது என கூறப்படுகிறது.