அரியலூர் மாவட்டத்தில் நம்மங்குனம், சிறுகளத்தூர், வஞ்சனபுரம், அங்கராயநல்லூர், அயன்ஆத்தூர், சில்லக்குடி, காவனூர், அரியலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 20 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே சென்னை கோயம்பேட்டில் சுமைதூக்கும் தொழிலாளிகளாக வேலை செய்து கொண்டிருந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் அவரவர் ஊர்களுக்குச் சென்னையிலிருந்து லாரிகள் மூலம் வந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 8 க்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து சிமெண்ட் லோடுகள் இரவு- பகல் பாராமல் சென்னை உட்பட பல்வேறு ஊர்களுக்கும் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகிறது. அப்படிச் சென்னை சென்று இறக்கி விட்டு மீண்டும் சிமெண்ட் ஆலைகளுக்குத் திரும்பிவந்த லாரிகளில் சென்னையிலிருந்து வந்துள்ளனர்.
அப்படி வந்தவர்கள் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்குமென்று கூறப்படுகிறது. இவர்களில் 20 பேருக்கு கரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மருத்துவக் குழுவினர் அனைவரும் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமப் பணியாளர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், செயலாளர்கள் மூலம் சென்னையிலிருந்து வந்தவர்களை அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களை அந்தந்த ஊர்களில் உள்ள பள்ளிகளிலும் சமுதாயக் கூடங்களிலும் தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரியலூர் மாவட்டம் மத்திய அரசு அறிவித்த சிவப்பு நிற அடையாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதேபோன்று பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சரக்கு லாரிகளிலும் இதர வாகனங்களிலும் சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் செல்வதற்கு எப்படி அனுமதி அளித்தார்கள். மாவட்டத்தை விட்டு வெளியே செல்வதற்குப் பாஸ் வாங்க வேண்டும் என்று கூறிய அரசு, இப்படி ஆயிரக்கணக்கில் சென்னையில் இருந்து வெளியேற எப்படி அனுமதித்தார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், இதன்மூலம் கிராமங்களில் நோய்ப் பரவல் அதிகரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வேதனைப்படுகின்றனர்.