விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வி.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 64 வயது முத்துகிருஷ்ணன். இவரது மனைவி 59 வயது குணசாலி. இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், இவர்கள் இருவர் மட்டும் தனியாக வசித்துவந்துள்ளனர்.
நேற்று முன்தினம், மாலை கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த குணசாலி வீட்டில் விவசாய பயிருக்கு தெளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த விஷ மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு பதறிப்போன அவரது கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் குணசாலியை உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குணசாலி இறந்துபோனார். தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மனைவி இறந்துபோனதை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்த முத்துகிருஷ்ணன், மனைவியை அடக்கம் செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின், யாருக்கும் தெரியாமல் பூச்சி மருந்து வாங்கிவந்து குடித்துள்ளார். அதை வெளியே சொல்லாமல் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று முத்துக்கிருஷ்ணன் மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஒருவருக்கொருவர் விஷமருந்தி அடுத்தடுத்து இறந்துபோன சம்பவம் அவ்வூர் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.